திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் நன்றி தெரிவிக்க செல்லும் நிலையில் எம்ஜிஆர் உடன் விஜய் இருப்பது போன்ற பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது பேசப்பொருளாக மாறியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய், இன்று திருச்சி நகருக்கு வருகை தருகிறார். திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜோசப் கல்லூரி வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு திருச்சி முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் ராஜினாமா செய்த விஜய், தொகுதி மக்களின் அன்புக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் இந்த பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
நகரின் முக்கிய சாலைகள், சந்துகள் என எல்லா இடங்களிலும் விஜய்யின் பிரமாண்ட கட்-அவுட்கள், கொடிகள் மற்றும் பல்வேறு அளவிலான பேனர்கள் நிறைந்துள்ளன. இந்த அலங்காரங்கள் திருச்சி நகருக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பல பேனர்களில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உருவம் இடம்பெற்றிருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஒரு பேனரில் எம்.ஜி.ஆர். ஜோசப் விஜய்க்கு செங்கோல் வழங்குவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. தமிழக அரசியலில் அதிகாரத்தையும், பாரம்பரியத்தையும் குறிக்கும் செங்கோல் சின்னம் இங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
விஜய்யும் எம்.ஜி.ஆரும் இணைந்து தோன்றும் புகைப்படங்கள் பல பேனர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பேனர்கள் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப முக்கிய அர்த்தம் பெறுகின்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பின் தவெக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே விஜய்யுடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவங்கள் இடம்பெற்ற பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
திருச்சியிலும் இதே மாதிரியான வரவேற்பு ஏற்பாடுகள் தொடர்வது, அதிமுகவில் இருந்து தொடர்ந்து உறுப்பினர்கள் இணையும் போக்கை பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த நிகழ்வு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதி வரும் தவெகவுக்கு கூடுதல் வலிமையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய்யின் வருகையால் திருச்சி நகரம் பரபரப்பான நிலையில் உள்ளது. பொதுக்கூட்டத்தில் தொகுதி மக்களின் நலனுக்கான பல்வேறு அறிவிப்புகளும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
