திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று மாலை, கும்மிடிப்பூண்டியில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானாள். குழந்தையை காணாத பெற்றோர் அதிர்ச்சியடைந்து, உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து தீவிரமாக தேடினர். சிறிது நேரத்துக்குப் பிறகு, வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள முட்புதர் நிறைந்த பகுதியில் மயக்க நிலையில் குழந்தை கிடந்ததை பொதுமக்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவர்களின் ஆரம்ப பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து கும்மிடிப்பூண்டி போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கினர். சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைப் பெற்று ஆராய்ந்தனர். விசாரணையின் அடிப்படையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது மஞ்சி என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். அவர் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் புலம்பெயர் தொழிலாளியாக பணியாற்றி வந்ததாக தெரியவந்துள்ளது.

இதனிடையே, குழந்தையை நான்கு பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்தும் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்யும் வகையில் சுற்றுப்புறத்தைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். முழுமையான மருத்துவ பரிசோதனை அறிக்கை வரும் வரை சம்பவத்தின் முழு பின்னணி தெரியவராது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவம் கும்மிடிப்பூண்டி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

போலீசார் தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்து வரும் நிலையில், முழு உண்மை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை விரைவில் குணமடைய பொதுமக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version