மத்திய அரசில் விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு நடைபெறக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் தீவிர பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் நிச்சயமற்றதாக இருப்பது, வரவிருக்கும் பல மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் பா.ஜ.க.வுக்குள் நடைபெறும் அமைப்பு ரீதியான மாற்றங்கள் ஆகியவை இந்த முடிவுக்கு முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன. 2024 ஜூன் 9-ஆம் தேதி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இருப்பினும், தற்போது அமைச்சர்களின் செயல்திறன் அடிப்படையில் விரிவான மதிப்பீடு நடைபெற்று வருவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் சில முக்கிய அமைச்சகங்களில் புதிய முகங்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. ரயில்வே, நிதி, கல்வி, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 10 முதல் 12 முக்கிய அமைச்சகங்களில் கணிசமான மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படக்கூடும், சிலருக்கு பதவிகள் பறிக்கப்படலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக, ரயில்வே, மின்னணு-தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறைகளைக் கவனித்து வரும் அஸ்வினி வைஷ்ணவின் பொறுப்புகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், நீட் தேர்வு சர்ச்சை உள்ளிட்ட கல்வித்துறை பிரச்னைகள் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் நிலை கவனத்துக்குரியதாக மாறியுள்ளது. இதனிடையே, இந்தியா சார்பாக ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக ஒருங்கிணைத்த முன்னாள் வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இளம் தலைமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 40 முதல் 50 வயதுக்குட்பட்ட புதிய முகங்களுக்கு அதிக இடம் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்தல்களில் கூட்டணி சமநிலை, வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட தேர்தல் வியூகங்களை மனதில் கொண்டு இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த அமைச்சரவை மாற்றம் வெறும் நிர்வாக ரீதியான நடவடிக்கையா அல்லது 2029 லோக்சபா தேர்தலுக்கு முன்னோடியான பெரிய அரசியல் உத்தியா என்பது விரைவில் தெளிவாகும். பா.ஜ.க. தலைமை இந்த மாற்றத்தின் மூலம் அரசின் செயல்பாட்டை மேம்படுத்தி, மக்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்க நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version