மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலில் படுதோல்வியைத் தொடர்ந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சி கடுமையான உடைவை எதிர்கொண்டுள்ளது. கட்சியின் 80 எம்எல்ஏக்களில் 50க்கும் அதிகமானோர் தனி அணியாகப் பிரிந்து, பாஜக ஆதரவுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். இதனால் மாநில அரசியலில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள மம்தா, தொடர்ந்து எம்பிக்கள், முக்கிய தலைவர்கள் விலகும் அலையையும் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

நேற்று பேஸ்புக் லைவ் மூலம் உரையாற்றிய மம்தா பானர்ஜி, கட்சியில் இருந்து வெளியேற விரும்புவோருக்கு வேண்டுகோள் விடுத்தார். “பாஜக, காவல்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ, சிஐடி உள்ளிட்ட அமைப்புகளின் அழுத்தம் அல்லது நிலுவையிலுள்ள வழக்குகள் காரணமாக யாரேனும் வெளியேற விரும்பினால், ஜூலை 21க்கு முன்பே வெளியேறிவிடுங்கள். நாம் கட்டியெழுப்பிய கட்சியின் பெயரைக் கெடுக்க வேண்டாம். தாராளமாக வெளியேறலாம். இதனால் எங்கள் கட்சி பலவீனமடையாது. யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பது முக்கியமல்ல. கட்சியில் நீடிப்பவர்களே எங்களின் உண்மையான பலம். ஜூலை 21க்குப் பிறகு நாங்கள் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்துவோம்” என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

இந்தச் சூழலில், பிரபல நடிகையும் டிஎம்சி மாநிலங்களவை உறுப்பினருமான கோயல் மல்லிக் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவைச் சந்தித்தது அவரது பாஜக இணைப்பு ஊகங்களை அதிகரித்துள்ளது. இருப்பினும், மம்தா பானர்ஜி கோயல் மல்லிக்குக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். “1993 ஜூலை 21 துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் குடும்பத்தினர் கூட மிரட்டப்பட்டு பாஜகவுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கேள்விப்பட்டேன். அவர்கள் போகலாம், ஆனால் அவர்களின் இதயம் எப்போதும் நம்முடன்தான் இருக்கும்” என்று உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டார்.

ஜூலை 21 – தியாகிகள் தினத்தின் வரலாற்றுப் பின்னணி: 1993 ஜூலை 21 அன்று, அப்போது காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவியாக இருந்த மம்தா பானர்ஜி, ஜோதி பாசு தலைமையிலான இடதுசாரி அரசின் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்தார். வாக்காளர் அடையாள அட்டை அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்பதே முக்கியக் கோரிக்கை.

கொல்கத்தா வீதிகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்ட இந்தப் போராட்டத்தின்போது காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 13 இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உயிரிழந்தனர். மம்தாவும் காயமடைந்தார். இந்தச் சம்பவம் மாநிலம் தழுவிய அளவில் இடதுசாரி அரசுக்கு எதிரான எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியது. பின்னர் காங்கிரஸிலிருந்து பிரிந்த மம்தா, 1998இல் திரிணாமுல் காங்கிரஸைத் தொடங்க இந்தத் தியாகிகள் தினமே முக்கிய அடித்தளமாக அமைந்தது.

தற்போதைய உடைவு அலையில் பல மூத்த தலைவர்கள் விலகுவது மம்தாவுக்கு பெரும் சவாலாக உள்ளது. இருப்பினும், ஜூலை 21க்குப் பிறகு புதிய உத்வேகத்துடன் கட்சியை மீட்டெடுக்கும் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். மேற்கு வங்காள அரசியல் இனி எப்படி மாறும் என்பதை நாடே உற்று நோக்குகிறது.

 

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version