டெல்லியில் திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை, கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதமடைந்துள்ளன.
டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 பகுதியில் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கூடிய ராட்சத புயல் வீசியது. காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், தரைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நகரும் படிக்கட்டுகள் மற்றும் இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களுக்குச் சொந்தமான தரைவழிச் சேவை உபகரணங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டை இழந்து காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அவ்வாறு வேகமாக நகர்ந்து சென்ற உபகரணங்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் 3 ‘ஏ320’ (A320) ரக விமானங்கள் மீது பலமாக மோதின.
காற்றின் வேகத்தில் ராட்சத படிக்கட்டுகள் தானாகவே தார்சாலையில் ஓடுவதும், விபத்தைத் தவிர்க்க விமான நிலைய ஊழியர்கள் புயல் காற்றையும் பொருட்படுத்தாமல் அதன் பின்னால் ஓடிச் சென்று நிறுத்த முயலும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
https://x.com/VishalVarta/status/2063862353511477278?
விபத்துக்குள்ளான 3 ஏர் இந்தியா விமானங்களும் உடனடியாகச் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டு, தீவிரப் பரிசோதனை மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதில் இரண்டு விமானங்கள் சில நாட்களில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றும், மற்றொரு விமானம் பலத்த சேதமடைந்துள்ளதால் அதனைச் சரிசெய்ய அதிக நாட்கள் ஆகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த சமயத்தில் விமானங்களுக்குள் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே, இந்த திடீர் புயல் குறித்து ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் தரப்பில் இருந்து விமான நிலையத்திற்கோ அல்லது விமான நிறுவனங்களுக்கோ முன்கூட்டியே எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
