நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை 10 கோடியாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் , வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அக்கறையோடு செயல்பட்டு வருவதாக கூறினார்.மேலும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிக அளவில் கடன் உதவி வழங்கப்படுவதாக கூறிய முதலமைச்சர், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இதுவரை 13000 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ. 67.97 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், கிராம புறங்களில் 3.38 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை 10 கோடியாக உயர்த்த வலியுறுத்தியுள்ளதாக கூறிய அவர், இந்த நிதியை உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாகவும் கூறினார். சிறு விவசாயிகளுக்கு 55 விழுக்காடு மானியமும் மற்ற விவசாயிகளுக்கு 45 விழுக்காடு மானியமும் வழங்கப்படும் நிலையில், விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட திமுக அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து மானியம் வழங்கி வருவதாகவும், விவசாயிகளுக்கான 16 சதவீதம் ஜிஎஸ்டி வரியையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும் என்றார்.
இதுவரை 3397 குழந்தைகள் நல மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாக கூறிய அவர், 22 லட்சம் குழந்தைகளுக்கு சத்து மாவு வழங்கப்படுவதாகவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்து மாவு வழங்கப்பட்டு ஊட்டச்சத்து கண்காணிக்கப்படுகிறது என்றும், 5552 மையங்களை தரம் உயர்த்த ஆணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
14.6% ஆக இருந்த குழந்தைகளின் மெலிவுத்தன்மை 3.6% ஆக குறைந்துள்ளதாக கூறிய அவர், குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் பெறும் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அனைத்து திட்டங்களும் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மத்திய அரசு தன்னுடைய நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என இந்த குழு மூலம் வலியுறுத்தப்படும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், துரை வைகோ, மாணிக்கம் தாகூர், டி.ஆர்.பாலு, அமைச்சர்கள். ஐ.பெரியசாமி, பன்னீர்செல்வம், கீதாஜீவன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்