உடன்பிறப்பின் குரல் இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளை பெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள், உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களிடம் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘உடன்பிறப்பின் குரல்’ (udanpirapinkural.in) என்ற இணையதளத்தில் தங்கள் கருத்துகளை நேரடியாகப் பதிவு செய்யுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடன்பிறப்பின் குரல் இணையதளம் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளது. இந்த தளத்தின் முக்கிய நோக்கமே, உடன்பிறப்புகள் அனைவரும் எந்தவித தயக்கமும் இன்றி தங்கள் மனதில் உள்ள கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.
உங்கள் ஒவ்வொரு கருத்தும் நேரடியாக எனக்கு வந்து சேரும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் ஆலோசனைகளை இந்த தளத்தில் பதிவு செய்யலாம். இந்த கருத்துகளை நான் தீவிரமாக ஆராய்ந்து, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுவேன்” என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். இணையதளத்தில் கருத்துகளைப் பதிவு செய்ய மே 31-ம் தேதிக்குள் (நாளை) முடிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முயற்சி திமுகவின் அடுத்தகட்ட திட்டங்கள், கொள்கைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளுக்கு மக்களின் நேரடி பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் முதல் மேல் நிலை நிர்வாகிகள் வரை அனைவரின் கருத்துகளையும் ஒருங்கிணைக்கும் இந்த தளம், ஜனநாயக முறையில் கட்சியை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கழக மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் இந்த செய்தியை தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்கள், வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு ஊடங்கள் வாயிலாக அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வகையில் பரவலாகப் பகிருமாறு மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த அறிவிப்பு திமுகவினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கட்சியின் கொள்கை வகுப்பு, தேர்தல் உத்திகள் மற்றும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த கருத்து திரட்டல் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடன்பிறப்புகள் அனைவரும் தவறாது இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், பல லட்சம் கருத்துகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
