அதிமுக எம்.எல்.ஏக்களை விலைபேசி குதிரை பேரத்தில் ஈடுபடும் தவெக அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த ஆளுநரிடம் அதிமுக சார்பில் மனு அளித்திருப்பதாக அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இன்று காலை ஆளுநரை சந்தித்த அதிமுகவின் எம்.பி தனபால் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி,  தமிழ்நாட்டில், தற்போது நடைபெறுகின்ற குதிரை பேரத்தின் மூலமாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசிக் கொண்டிருக்கும் தவெக அரசின் நடவடிக்கைகளை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 167-ன் கீழ் தடுத்து நிறுத்த வேண்டும், என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார் மனுவினை தானும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தனபாலும் ஆளுநரை சந்தித்து கொடுத்து வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

 

தலைமைச் செயலகத்தையே தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகமாக மாற்றிவிட்டார்கள் என்பதையும், மனுவில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளதாகவும், ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்னும் நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாகவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version