இடி, மின்னலுடன் கூடிய தீவிர மழை பெய்யும். மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. அரபிக்கடலின் மத்திய பகுதியில் இருந்து தொடங்கிய வலுவான மழை மும்பை உள்ளிட்ட மராட்டியத்தின் பல்வேறு மாவட்டங்கள், தெலுங்கானா, ஒடிசா, சத்தீஷ்கார், ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

வழக்கமாக ஜூன் 10-ம் தேதி தொடங்க வேண்டிய பருவமழை இந்த ஆண்டு கணிசமாக தாமதமாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, 2023-ம் ஆண்டும் ஜூன் 25-ம் தேதி மழை தொடங்கியது. வரலாற்றில் மிகவும் தாமதமான ஆண்டுகளில் 1958 மற்றும் 1974-ல் ஜூன் 28-ம் தேதி பருவமழை பெய்யத் தொடங்கியதாக பதிவாகியுள்ளது. இந்த முறை 13 நாட்கள் தாமதத்துக்குப் பின், நேற்று இரவு மும்பையில் பருவமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து சிரமத்தை ஏற்படுத்தியது.

இன்று மும்பை மற்றும் அருகிலுள்ள பால்கர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இடி, மின்னலுடன் கூடிய தீவிர மழை பெய்யும் என்றும், மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தானே மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசிய பயணங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்புடன் இருக்கவும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மும்பையில் மழை தொடர்ந்து வருகிறது. மூன்றாவது நாளாக நேற்று காலை 7 மணியளவில் தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்தது. பல இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்த மழையால் சாலைகளில் நீர் தேங்கியது. எனினும், ஏரிகளின் நீர் மட்டம் இன்னும் குறைவாகவே உள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் வெறும் 8.07 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இது நகரின் குடிநீர் பிரச்னையை இன்னும் நீடிக்கச் செய்யும் என அஞ்சப்படுகிறது.

போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தபடி, நேற்று ரெயில் மற்றும் சாலைப் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. பெஸ்ட் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இருப்பினும், வரும் நாட்களில் மழை தீவிரமடையும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version