சென்னையின் வேளச்சேரி பகுதியில், லீசுக்கு வீடு தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்படும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறை தாமதம் காட்டியதாக குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், லீசுக்கு வீடு தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஒரே வீட்டை பலருக்கு காட்டி, ஒருவரிடம் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக அக்பர் ஷெரிப் தலைமையிலான கும்பல் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதேபோல் ஏமாற்றப்பட்ட பலர் கடந்த பல மாதங்களாக வேளச்சேரி காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பது, கட்டப்பஞ்சாயத்து மூலம் அச்சுறுத்துவது உள்ளிட்ட செயல்களில் மோசடி கும்பல் ஈடுபட்டதாகவும், அதுகுறித்து பலமுறை காவல்துறையிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பல்வேறு புகார்கள் காவல் நிலையத்தில் குவிந்திருந்த போதிலும், முக்கிய குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆரம்பத்திலேயே காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால், அடுத்தடுத்து பலர் ஏமாறும் நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில், காவல்துறை அலட்சியத்தை கண்டித்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக நுழைவாயில் முன்பு அமர்ந்து சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதுவரை சுமார் 4 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுப்பிய பாதிக்கப்பட்டவர்கள், முக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, இதேபோல் ஏமாற்றப்பட்டதாக கூறி மேலும் பலர் காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகி புகார் அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

