தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைமையிலான அரசுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து மனு அளித்தார். நேற்று தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஆரம்பமாகிறதா ‘தூயசக்தி’யின் ஊழல் வேட்டை?” எனக் கேள்வி எழுப்பிய நாகேந்திரன், தவெக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் லஞ்ச அடிப்படையில் நடைபெறுவதாக ஒரு வழக்கறிஞர் அளித்த புகாரைச் சுட்டிக்காட்டினார்.

இந்த புகார் பரபரப்பு அடங்கும் முன்பே, உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 2006-ம் ஆண்டு பிறந்த ஒருவர் மற்றும் பெயரே இல்லாத ஒருவர் தேர்வு பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக வெளியான குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

“அரசு வேலைகளை தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்கும் ஆளும் கட்சியின் ஆணவம் கடும் கண்டனத்துக்குரியது” என விமர்சித்த நாகேந்திரன், “நாங்களும் ஊழல் செய்ய மாட்டோம், செய்பவர்களையும் விட மாட்டோம்” என முதல்வர் விஜய் பேசிய வார்த்தைகளுக்கு நேர்மாறாக, ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து ஊழல் முறைகேடுகள் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், வேண்டியவர்களுக்கு பதவிகள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.

பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலைக்காகக் காத்திருக்கும் நிலையில், அவர்களின் எதிர்காலம் இப்படி சிதைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய அவர், முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக இந்த ஊழல் முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் என்றும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாஜக நிர்வாகிகள் சிலருடன் ஆளுநரை சந்தித்தபோது இந்த புகார் மனு அளிக்கப்பட்டது.

இதேவேளையில், தவெக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் ஊழலை ஒழிப்பதை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மாநிலத்தின் நிதிநிலை மற்றும் மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பல்வேறு அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளிகளில் கட்டண விவரங்களை நோட்டீஸ் போர்டில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளிப்படையாக ஒட்ட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சியான பாஜகவின் புகாரும், ஆளும் தவெக அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளும் தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற தவெக அரசு, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளித்து, தேவையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் நோக்கர்கள் வலியுறுத்துகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version