தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்கிறது. அறிவிப்பு வெளியாகி, திமுகவுக்கு எதிரான இரண்டாம் அணியை உருவாக்கும் முயற்சி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஏற்கனவே பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் இருக்கிறார்கள். இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை இந்த கூட்டணி ஒற்றுமையோடு எதிர்கொள்ளுமா? இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி என மூவரும் பாஜக கூடாரத்தில் இணைகிறார்களா என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன.
அதிமுக – பாஜக கூட்டணி
கடந்த 1998-ம் நாடாளுமன்ற தேர்தலில் இருந்து, அதிமுகவும் பாஜகவும் பலமுறை கூட்டணி அமைத்திருக்கின்றன. இடையில் பலமுறை பிரிந்து, இணைந்திருக்கின்றன. கடைசியாக, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்ததற்கு பின்னால், அதிமுகவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், பாஜகவை அதிமுகவினரும் சரமாரியாக சாடிவந்தனர். இதனால் மீண்டும் பாஜக அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை கருதப்பட்டது. ஆனால் ஒரேடியாக அதை மாற்றி விடும்படி, கடந்த ஏப்ரல் 10-ம் தேதி சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணி உறுதி செய்த அறிவித்தார். அதுவரை திமுக அதிமுக இரண்டு கட்சிகளையும் விமர்சித்து வந்த பாஜக தலைவர் அண்ணாமலை தடாலடியாக தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் தலைவராக்கப்பட்டார். அதுவே இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கூட்டணியை இணக்கமான முறையில் செயல்படுத்தும் திட்டம் என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
அண்ணாமலை என்ன ஆனார்?
பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டதும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவியோ, வழக்கம்போல் ஏதேனும் ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் பதவியோ, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பதவியோ கட்சிக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்படி ஏதும் பதவி இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் தலைவர் பதவி பறிபோன விரக்தியில் அண்ணாமலை இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் விதமாக கட்சி கூட்டங்கள் எதிலும் அண்ணாமலை பங்கேற்காமல் இருக்கிறார். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி கோவையில், தற்போதைய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியிலும் அண்ணாமலையை காணவில்லை. ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னையில் நடந்த பேரணியிலும் அண்ணாமலை இல்லை. ஒரு கட்டத்தில் ஆளும் திமுக அரசை கடுமையாக சாடி, தமிழகத்தில் பாஜகவுக்கு கணிசமாக ரசிகர்களை பெற்று தந்த அண்ணாமலை, தற்போது அமைதியாய் இருக்கிறார்.
ஓபிஎஸ்உம் தேசிய ஜனநாயக கூட்டணியும்
இந்த நிலையில் தான் திருவண்ணாமலையில் தரிசனம் செய்த அண்ணாமலை, செய்தியாளர்களை சிந்தித்து பேசியபோது, நயினார் நாகேந்திரன் மற்றும் இபிஎஸ் தலைமையில் உருவாயிருக்கும் கூட்டணி மீது லேசாக கல் எறிந்து இருக்கிறார்.
அதாவது, நேற்று சென்னையில், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், நாங்கள் இன்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று ஆணித்தரமாகக் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ்ஐ நீக்க முடியாது என்று அவரது அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமும் உறுதியாக கூறினார். இபிஎஸ் தலைமையிலான அதிமுகவோடு கூட்டணி தீர்மானம் ஆகியுள்ள இந்த நிலையில், தாங்களும் அதே கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று ஓபிஎஸ் அணி கூறியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த கேள்விக்கு தான் அண்ணாமலை பூசியும் பூசாததும் போன்ற ஒரு பதிலை கூறியிருக்கிறார்.
பிரதமரின் இதயத்தில் ஓபிஎஸ்
செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “ஓபிஎஸ், இபிஎஸ் என அனைவரும் எங்களோடு தான் இருக்கிறார்கள். ஓபிஎஸ் க்கு பிரதமரின் இதயத்தில் நிரந்தரமான இடமிருக்கிறது. நான் ஒரு தொண்டனாகவே உங்களை சந்தித்து வருகிறேன். கூட்டணி விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்.” என்று பதில் அளித்தார்.
சென்னைக்கு வந்த அமித்ஷா, ஓபிஎஸ்ஐ சந்திக்காமல் போனது, பாஜக அவரை கழற்றிவிட்டு விட்டதா என்ற சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. இன்னொரு பக்கம் அமமுகவின் டிடிவி தினகரன், தாங்களும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம் என்றுதான் கூறி வருகிறார்.
இபிஎஸ் ஓபிஎஸ் டிடிவி சண்டை நாடறிந்தது. இந்த நிலையில் மூவரும் தாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக கூறி வருவது அரசியல் களத்தில் புதிய பரபரப்பு கிளப்புகிறது. அந்த தீயில் எண்ணெய் ஊற்றுவது போல ”யாரும் பிரிந்து செல்லவில்லை எல்லோரும் எங்களுடன் தான் இருக்கிறார்கள்” என்று அண்ணாமலை பேசியிருப்பது இன்னும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது
2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது தான் பிரச்சனை என்று கருதியே, அடுத்த தேர்தலில் அந்த கூட்டணி முறிந்தது. ஓபிஎஸ்ஸூம் டிடிவியும் பாஜகவுடன் இணைந்திருந்தார்கள். இப்போது மூன்று பேரையும் ஒரே கூடாரத்திற்குள் சேர்த்து திமுகவுக்கு எதிரான வலுவான அணியை கட்டமைக்கிறது பாஜக. ஆனால் இவர்களது ஒற்றுமை எப்படி இருக்கும் என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.
-விவேக்பாரதி