டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடுகளுக்கு எதிராக இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் நரேந்திர மோடிக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், அரசு நிர்வாகத்தில் பொறுப்புக்கூறலை வலியுறுத்திய அவர், தவறுகளுக்கு உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜூலை 20ஆம் தேதி பாராளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியின்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறை மற்றும் மத்திய படையினர் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மீது நடத்தப்பட்ட பலப்பிரயோகமும், அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய சம்பவமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இத்தகைய அடக்குமுறை அணுகுமுறைக்கு பதிலாக, அரசு பிரதிநிதிகளை அனுப்பி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று அன்னா ஹசாரே வலியுறுத்தியுள்ளார்.

தனது கடிதத்தில் அன்னா ஹசாரே கூறியுள்ளதாவது: “ஒரு துறையின் ஒட்டுமொத்தத் தோல்விக்கு அதன் உயர் தலைமையே பொறுப்பேற்க வேண்டும். வழக்கமாக ஊழல் அல்லது முறைகேடு நடந்தால் கீழ்மட்ட அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், அமைச்சர் பொறுப்பேற்று ராஜினாமா செய்தால் அரசு பலவீனமடையாது. மாறாக, நிர்வாகத்தில் பொறுப்புக்கூறல் அதிகரிக்கும். இது மற்ற அமைச்சர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்து, அரசின் செயல்பாட்டை மேலும் பொறுப்புமிக்கதாக மாற்றும்” என்பதாகும்.

2024ஆம் ஆண்டு நீட் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்த நிலையில், இந்த ஆண்டும் அதே பிரச்சனை தொடர்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 22 லட்சம் மாணவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வுகள் ரத்து செய்யப்படலாம் அல்லது மறுதேர்வு நடைபெறலாம் என்ற நிச்சயமற்ற தன்மை மாணவர்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக வரும் தகவல்கள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன.

அரசு வேலைவாய்ப்புகளில் ஏற்படும் தாமதங்கள், தொடர் வினாத்தாள் கசிவுகள், அதிகரித்து வரும் வேலையில்லா பிரச்சனை ஆகியவை இளைஞர்களிடையே கோபத்தையும் கொந்தளிப்பையும் அதிகரித்துள்ளன. இந்தப் பிரச்சனையை வெறும் சட்ட ஒழுங்கு பிரச்சினையாக அரசு அணுகக் கூடாது என்று அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்.

ஜனநாயக மற்றும் காந்திய அஹிம்சை வழியில் போராடும் மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கைகளை பொறுமையுடன் கேட்டு, பரஸ்பர நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அவர் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவங்கள் நாடு முழுவதும் இளைஞர் போராட்டங்களைத் தூண்டியுள்ள நிலையில், அரசின் உடனடி நடவடிக்கைகள் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version