திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடுக்கு பிள்ளையார் கோயில் சமீபகாலமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குகை வடிவிலான குறுகிய துவாரத்தின் வழியாக நெளிந்து வளைந்து செல்வதன் மூலம் நோய்கள் தீரும், கருப்பை பிரச்சினைகள் நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டும், பில்லி சூனியம் போன்ற எதிர்மறை சக்திகள் விலகும் என்பது பக்தர்களிடையே நிலவும் ஐதீகம்.
இந்த அனுபவம், குழந்தை பிறக்கும் போது தாயின் கருப்பையிலிருந்து வெளியே வரும் செயல்முறையை நினைவூட்டுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். பின்புற வாசல் வழியாக ஒருக்களித்து நுழைந்து, உடலை வளைத்து முன்பக்கம் வெளியேறினால் பிள்ளையார் தரிசனம் கிடைக்கும். இத்தகைய நம்பிக்கையால் புதுமணத் தம்பதிகள் உள்ளிட்ட பலரும் இங்கு வருகை தருகின்றனர். ரத்த ஓட்டம் சீராகி உடல் வலிகள் குறையும் எனவும் பலர் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
எனினும், இந்த குறுகிய துவாரம் சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24ஆம் தேதி இரவு 1.40 மணியளவில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரம் அருகேயிருந்து கிரிவலம் வந்த தாசரி மணிக்குமார் (36) என்பவர் கோயிலுக்குள் நுழைந்தார். உடல்பருமன் காரணமாக அவர் சிக்கிக்கொண்டார். உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் முயற்சியும் பலனளிக்கவில்லை. மயக்கமடைந்த அவர் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது மருத்துவர்கள் அவரை இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று மற்றொரு ஆந்திரப் பெண் துவாரத்தில் சிக்கிக்கொண்ட நிலையில், பக்தர்களின் உதவியால் உயிர் காப்பாற்றப்பட்டார். இந்த இரு சம்பவங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் முக்கிய முடிவெடுத்துள்ளது.
உடல்பருமன் மிக்கவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர், வயதானவர்கள் ஆகியோர் துவாரத்திற்கு அருகிலே செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவுப் பகுதியில் குறுகிய இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கம்பிகளுக்கு இடையே நுழைய முடிந்தவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் வெளியே நின்றபடியே சுவாமி தரிசனம் செய்யலாம்.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் வழிகாட்டு அறிவிப்புகளுடன் கூடிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்பைப் பெற்றுள்ளது. கோயில் அதிகாரிகள், “ஐதீக நம்பிக்கையைப் பேணும் அதே வேளையில் பக்தர்களின் உயிர் பாதுகாப்பு முக்கியம்” என்று தெரிவித்துள்ளனர்.
