இந்தியத் திரையிசையின் சகாப்தமாகவும், ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று லட்சக்கணக்கான ரசிகர்களால் அன்போடு போற்றப்பட்ட மூத்த பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88), உடல்நலக்குறைவு காரணமாக மைசூருவில் காலமானார். இவருடைய மறைவு, இசை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடகி எஸ். ஜானகியின் மறைவை கௌரவிக்கும் விதமாக, கர்நாடக அரசு அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இன்று காலை முதல் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இசை உலகில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி, பல தலைமுறைகளைக் கடந்தும் தனது குரலால் ரசிகர்களை ஈர்த்த இந்த இசைப் பொக்கிஷத்திற்கு அஞ்சலி செலுத்தப் பலரும் திரண்டு வருகின்றனர்.

அஞ்சலி நிகழ்வுகள் முடிந்த பிறகு, இன்று பிற்பகல் 3:00 மணி அளவில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்குகிறது. அங்கிருந்து அவரது உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, கனியனகுந்தி பகுதியில் உள்ள மயானத்தில் காவல்துறையின் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் தனது ஒரே மகன் முரளி கிருஷ்ணாவின் திடீர் மறைவினால் மனமுடைந்திருந்த எஸ். ஜானகி, அதன்பிறகு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று இரவு உடல்நிலை மோசமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில் தன் காந்தக் குரலால் உலகைத் தன் வசப்படுத்திய எஸ். ஜானகியின் மறைவு, இந்திய இசை வரலாற்றில் ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது புகழ் காலத்தால் அழியாதது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version