ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், வக்கீலாக பதிவு செய்ததையொட்டி, பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனர். காங்கிரஸ் எம்.பி சுதா, இந்தப் பதிவை நீக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வக்கீல் பதிவுக்குழு தலைவர் கே.பாலு இந்த சர்ச்சைகள் தொடர்பாக விளக்கம் தெரிவித்துள்ளார்.
1961- வக்கீல்கள் சட்டம் பிரிவு 24-ன்படி வக்கீல்கள் பதிவு செய்வதற்கான தகுதிகள் குறித்து கூறுகிறது. பிரிவு 24 ஏ– தகுதியின்மை குறித்து தெளிவுப்படுத்துகிறது. அதில், பிரிவு 24 ஏ கீழ் ஒருவர் குற்றவாளியாக கோர்ட்டினால் அறிவிக்கப்பட்டு, அதற்குரிய தண்டனையை அனுபவித்து முடித்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு வக்கீலாகப்பதிவு செய்யலாம் என கூறுகிறது.
அதன் அடிப்படையில் பேரறிவாளன் முறைப்படி சட்டக்கல்வி பயின்று, பிறகு பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்ய விண்ணப்பித்தார். அவர் 2022-ம் ஆண்டு விடுதலை ஆனார். அவரது விண்ணப்பம், அலுவலக குறிப்பு ஆகியவை பார் கவுன்சில் பதிவு குழுவால் பரிசீலிக்கப்பட்டது. அதன்படி, அவர் வக்கீலாக பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டார்.
இதில் எந்த சட்டவிதிமீறலும் இல்லை. இதேபோன்று பல ஆயுள் தண்டனை கைதிகள், அரசு அலுவலராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள், தண்டனை காலம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு வக்கீலாக பதிவு செய்யப்பட்டு, தற்போது வக்கீலாக பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், பேரறிவாளனும் வக்கீலாக பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். மேலும், ஒரு குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர், தண்டனை காலம் முடிந்து குறிப்பிட்ட காலத்துக்கு பின், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட முடியும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அனுமதிக்கிறது.
சட்டவிதிகளை புரிந்துக் கொள்ளாமல், பேரறிவாளனை வக்கீலாக நியமனம் செய்தது தொடர்பாக தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்வதாக பதிவுக் குழு தலைவர் கே.பாலு தெரிவித்துள்ளார்.
