திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகிலுள்ள புதூர் படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி ருக்மணி (56). குடும்பத்தை நடத்தும் பொருட்டு 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் ஏரி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இவர், சமீபத்தில் 125 நாள் வேலைக்கான ஊதியத்தைப் பெறுவதற்காக நேற்று சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குச் சென்றார்.

வங்கியில் கணக்கு விவரங்களைச் சரிபார்த்த ஊழியர்கள், அதிர்ச்சியளிக்கும் தகவலைத் தெரிவித்தனர். ஆம்பூர் வட்ட வணிகவரி உதவி ஆணையர் அலுவலகத்திலிருந்து வந்த கடிதப்படி, ருக்மணி ‘ஆர்.எம். டிரேடர்ஸ்’ என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன் மூலம் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் ரூ.2 கோடியே 79 லட்சம் 19 ஆயிரத்து 420 ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவரது வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ருக்மணி அதிர்ச்சியுடன், தான் எந்தவித தொழில் நிறுவனமும் நடத்தவில்லை என்றும், 100 நாள் வேலைத் திட்டத்தில் தினக்கூலிக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வருவதாகவும் விளக்கினார். “நான் ஒரு சாதாரண ஏழைப் பெண். வேலை செய்து கிடைக்கும் கூலிப்பணத்தை எடுக்க வந்தேன். இப்படி ஒரு நோட்டீஸ் வந்திருப்பது எனக்குப் புரியவில்லை” என்று கூறினார். கணக்கு முடக்கம் காரணமாக ஊதியப் பணத்தை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

ஒரு ஏழைப் பெண்ணுக்கு ரூ.2.75 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி உண்மையை வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும், அரசுத் திட்டங்களின் செயல்பாடு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version