தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ‘பராசக்தி’ படக்கதை திருடப்பட்டது என ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் ‘பராசக்தி’.
இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ்நாட்டில் இந்திமொழி திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட மொழிப்போராட்டத்தை மையப்படுத்தியதான கதையை மையக்கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது ‘செம்மொழி’ என்ற கதையை திருடி உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மொழிப்போரை மையமாக வைத்து எழுதிய கதைக்கருவை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியே பாராட்டியுள்ளதாக ராஜேந்திரன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு பதிவு செய்திருந்த இந்த கதையை தயாரிப்பாளர் சேலம் தனசேகரனிடம் கொடுத்ததாகவும், அதை நடிகர் சூர்யா இயக்குனர் சுதா கொங்கராவிடம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இவ்வழக்கின் முதற்கட்ட விசாரணையின் முடிவில், “கதை திருட்டு புகார் தொடர்பாக அனைத்து தரப்பினரையும் விசாரித்து ஜனவரி 2ல் அறிக்கை தருமாறு” தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“ஏற்கனவே சென்சார் போர்டில் கெடுபிடிகள், தற்போது இந்த பிரச்சனை. இதையடுத்து ‘பராசக்தி’ திரைப்படம் குறிப்பிட்ட நாளில் திரையரங்குகளில் வெளியாகுமா?” என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், “இது எல்லாம் படத்திற்கான கடைசி கட்ட புரொமோஷன் வேலைகள்” என ஒரு தரப்பினர் முணுமுணுத்து வருகின்றனர்.
