பாஸ்போர்ட் என்பது பயண ஆவணம் மட்டுமே; குடியுரிமைக்கான ஆவணம் அல்ல’ என, வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
பாஸ்போர்ட்டை குடியுரிமை மற்றும் அரசு சலுகைகளுக்கான இறுதி ஆதாரமாகப் பயன்படுத்தலாமா என்பதில் பொதுமக்களிடையே நிலவும் குழப்பத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட் முக்கியமாக சர்வதேசப் பயணத்தை எளிதாக்குவதற்கும், வெளிநாடுகளில் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கும் உள்ள பயண ஆவணம் மட்டுமே என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு பல்வேறு அரசு திட்டங்கள், சலுகைகள் மற்றும் சேவைகளுக்கு பாஸ்போர்ட்டை சான்றாக சமர்ப்பிக்க முயலும் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்போர்ட் இந்திய குடியுரிமையை நிரூபிக்கும் இறுதி ஆவணம் அல்ல என்பதை MEA தெளிவாக்கியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் அதன் திருத்தங்களின்படி குடியுரிமைக்கான ஆதாரங்கள் பல்வேறு வகையான ஆவணங்களை உள்ளடக்கியிருந்தாலும், ஒரே ஒரு ஆவணத்தை முழுமையான சான்றாகக் கருத முடியாது என்பது அரசின் நிலைப்பாடாகும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மும்தாஜ் படேல், “இந்திய குடிமக்கள் தங்கள் குடியுரிமையை எந்த ஆவணத்தின் மூலம் நிரூபிப்பார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அதேவே, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா எக்ஸ் (டிவிட்டர்) தளத்தில், “இந்திய குடியுரிமைக்கான ஒரே ஆதாரம் இந்துவாக இருப்பதும், பாஜக வாக்காளராக இருப்பதும்தான் என்ற நிலை உருவாகியுள்ளது போல் தெரிகிறது” என விமர்சித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தீவிர விவாதம் நடத்தி வருகின்றனர். பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல ஆவணங்கள் இருந்தும், குடியுரிமையை முழுமையாக நிரூபிக்க எந்த ஆவணம் உறுதியானது என்பதில் கேள்விகள் எழுந்துள்ளன. சிலர் பிறப்புச் சான்றிதழ் அல்லது பெற்றோரின் குடியுரிமை ஆவணங்களைச் சுட்டிக்காட்டினாலும், அதிகாரப்பூர்வ தெளிவு இன்னும் தேவைப்படுவதாகக் கருதுகின்றனர்.
இந்த விவகாரம் குடியுரிமை சான்று தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு தரப்பில் விரைவில் முழுமையான வழிகாட்டுதல்கள் வெளியாகும் என மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
