தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசை கலைக்க சில அரசியல் சக்திகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், புதிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பெரும் தொகைக்கு பேரம் பேசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்எல்ஏ இளையராஜாவிடம், சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ஒரு கும்பல் அணுகியுள்ளது. இதற்காக ரூ.35 கோடி வரை பணம் தருவதாக ஆசை காட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால், எம்எல்ஏ இளையராஜா இந்த சதிக்கு மயங்காமல், உடனடியாக சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதுவரை இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் திருநாவுக்கரசு உள்பட பலர் கைதாகியுள்ளனர். மேலும் மூன்று பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், நீதிமன்றம் இந்த மனுக்களை நேற்று நிராகரித்தது.

விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி, சாலி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் ஆகிய மூவரிடம் இருந்து சுமார் இரண்டு கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் பேரம் பேச்சில் பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அமைச்சர் நிர்மல் குமார் இதற்கு முன்பே தவெக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடைபெறுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். தற்போது இந்த சம்பவம் அவரது குற்றச்சாட்டுக்கு வலு சேர்த்துள்ளது. தவெக ஆட்சிக்கு எதிராக திட்டமிட்ட சதி நடைபெறுவதாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version