பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள கிராண்ட் மசூதி (Grand Mosque of Paris) தனது 100-வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. முதலாம் உலகப்போரில் பிரான்சுக்காக போராடி உயிர்நீத்த பிரெஞ்சு காலனிகளைச் சேர்ந்த முஸ்லிம் வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இந்த மசூதி 1926-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

100-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில், பிரான்சின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள், அல்ஜீரியா, செனகல் உள்ளிட்ட நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மசூதியின் தலைவர் செம்ஸ்-எத்தீன் ஹஃபிஸ் (Chems-eddine Hafiz) கூறுகையில், “பிரான்சின் பன்முகத்தன்மை மற்றும் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இந்த மசூதி திகழ்கிறது. முஸ்லிம்கள் தேசிய சமூகத்தின் ஒரு அங்கமாக பார்க்கப்பட வேண்டும் என்பது அனைவரின் பொறுப்பு” என்றார்.

அதேவேளையில், மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை ஒட்டிய அரசியல் சூழல் காரணமாக நாட்டில் மதரீதியான பதற்றம் அதிகரித்து வருவது குறித்து அவர் கவலை தெரிவித்தார். மேலும், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புச் செயல்கள் இன்னும் நடைபெற்று வருவதாகவும், இஸ்லாம் குறித்து தவறான புரிதல்கள் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.

33 மீட்டர் உயரமுள்ள மினாராவுடன் அமைந்துள்ள இந்த மசூதி, ஸ்பெயினின் கிரனாடாவில் உள்ள அல்ஹம்ப்ரா அரண்மனையின் கட்டிடக்கலையை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழுகை மண்டபம், தேநீர் மையம் மற்றும் ஹம்மாம் நீராவிக் குளியல் வசதிகளுடன் கூடிய இந்த மசூதி, பாரிஸின் முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் ஒன்றாக உள்ளது.

பிரான்சில் மேற்கத்திய ஐரோப்பாவிலேயே அதிகமான முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும், சமூக ஏற்றுக்கொள்ளல் மற்றும் மத அடிப்படையிலான பாகுபாடுகள் போன்ற சவால்களை அவர்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 100-வது ஆண்டு விழா மத நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மையை வலியுறுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version