பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதியில் தேர்தல் முறையில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, “ஜாயிண்ட் ஆர்மி ஆக்‌ஷன் கமிட்டி” என்ற அமைப்பு கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே அமைப்பின் முக்கிய கோரிக்கையாகக் கூறப்படுகிறது.

போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்த நிலையில், அப்பகுதி நிர்வாகம் அந்த அமைப்பை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவித்தது. இதன் பின்னரும் போராட்டங்களை கைவிட மறுத்த அமைப்பினர், பொதுமக்களிடம் மீண்டும் தெருக்களில் திரண்டு போராடுமாறு அழைப்பு விடுத்தனர்.

இந்த சூழலில் நேற்று பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தபோது நிலைமை திடீரென பதற்றமடைந்து வன்முறையாக மாறியது. இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 காவல்துறையினர் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வன்முறையின் போது 23 காவலர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்தும் நோக்கில், தடைசெய்யப்பட்ட அமைப்பின் 70-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். மேலும் கலவரம் பரவாமல் தடுக்க பல பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் முக்கிய நகரங்கள் மற்றும் சாலைகளில் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் இணைய சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நீடித்து வருவதுடன், நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version