தமிழக முதல்வர் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவைத் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய்யின் எலும்பை உடைப்பேன் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 20-ம் தேதி அவரைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாகச் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மாவட்ட நீதிபதி சுபாதேவி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஜாமீன் மனு விசாரணையின் போது, அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சங்கர நாராயணனும், எம்.எல்.ஏ தரப்பில் வழக்கறிஞர் ஜான் அலெக்சாண்டரும் ஆஜராகி சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கடுமையான வாதங்களை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுபாதேவி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், ‘ஈ-கோர்ட்’ (e-Court) இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்ட உத்தரவில், திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

