அதிமுகவில் இருந்து விலகிய பொன் ஜெயசீலன் விரைவில் தவெகவில் இணைவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பலர் விலகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக)வில் இணையும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் நேற்று அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், கூடலூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சமீபகாலமாக அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக விலகி வரும் நிலை கட்சியினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன் ஜெயசீலன் விரைவில் தவெகவில் இணையப் போவதாகவும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், அதிமுகவின் அடித்தள அமைப்புகளிலும் பலம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கட்சித் தலைமையின் மீதான அதிருப்தியே இத்தகைய விலகல்களுக்கான முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்குப் பிறகு ஏற்பட்ட உள் மோதல்கள், நிர்வாக ரீதியான முடிவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களில் உள்ள கருத்து வேறுபாடுகள் போன்றவை பலரையும் கட்சியை விட்டு வெளியேறத் தூண்டியதாகத் தெரிகிறது.

முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி, மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் போக்கில் இணைந்து வருவது அதிமுகவுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்த விலகல்கள் தொடருமா அல்லது கட்சித் தலைமை இதைத் தடுக்க ஏதேனும் உத்திகளை வகுக்குமா என்பது அரசியல் வட்டாரங்களின் ஆர்வமாக உள்ளது.

தவெகவைப் பொறுத்தவரை, இத்தகைய முக்கிய புள்ளிகளின் வருகை கட்சியின் வலிமையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் எதிர்கால அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version