யாருடன் கூட்டணி என்பதை ஜனவரி மாதம் 9-ந் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று தேமுதிக எதிர்பார்த்து வந்த நிலையில், அவர்களுக்கு 2026 ராஜ்யசபா தேர்தலில் இடம் தரப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 5 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி என்று எழுதி கொடுத்தது அதிமுக தான் என்று கூறினார். இப்போது 2 இடங்களிலும் அதிமுகவினரே போட்டியிட உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதற்கு நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்பாக அக்கட்சியின் கே.பி.முனுசாமி கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இதனை அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று பிரேமலதா குறிப்பிட்டார். மேலும் யாருடன் கூட்டணி என்பதை ஜனவரி மாதம் 9-ந் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, நடப்பு ராஜ்யசபா தேர்தலில் ஒரு சீட் வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக பொருளார் எல்.கே.சுதீஷ் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மக்களவையில் அதிமுகவுக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலையில், மாநிலங்களவையாவது உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய நெருக்கடியில் அதிமுக இருப்பதாக இபிஎஸ் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் அடுத்த ஆண்டு தரப்படும் என்றும் அவர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று பேசிவரும் எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவை தக்க வைக்க தவறி விட்டாரோ என்று தோன்றுகிறது. ஒருவேளை திமுக, தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் இழுக்கவும் இந்த சம்பவம் ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டதாக படுகிறது. எப்படியிருந்தாலும் ஜனவரி மாதம், கடலூர் மாநாட்டில் தேமுதிகவின் நிலைப்பாடு தெரிந்து விடும்.

Share.
Leave A Reply

Exit mobile version