மாநிலங்களவைத் தேர்தலுக்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது வேட்புமனு வை தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களான திமுகவின் வில்சன், எம்.எம்.அப்துல்லா, சண்முகம், மதிமுகவின் வைகோ, அதிமுகவின் சந்திரசேகரன், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 15-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து வருகிற 19-ந் தேதி ஆறு இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். கூட்டணி ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த ஒரு இடத்தில் கமல் போட்டியிடுவார் என்று மநீம செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று அதிமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
கடந்த 2-ந் தேதி ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 9-ந் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் இன்று தலைமை செயலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் முன்னிலையில் சட்டப்பேரவை செயலாளர் முன்பாக தன்னுடைய வேட்புமனுவை கமல்ஹாசன் தாக்கல் செய்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வ பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் மனுதாக்கலின் போது உடனிருந்தனர்.
அறிவிக்கப்பட்ட 6 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்யும்பட்சத்தில் ஆறுபேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.