பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலை இல்லாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், மனைவியே, கணவரை கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெரம்பூர் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் சூட்கேஸ் ஒன்றில் தலையில்லாத உடல் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீஸார் சூட்கேஸில் கிடந்த உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, பெரம்பூர் ரயில்வே போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பின்னர், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் இது குறித்து, ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், ஓட்டேரி போலீஸார் மற்றும் உதவி ஆணையர் ரமேஷ் பாபு தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், புளியந்தோப்பு துணை ஆணையர் முத்துக் குமார் தலைமையில் 6 தனிப்படைகளும், ரயில்வே போலீஸார் தலைமையில் 2 தனிப் படைகள் உட்பட 8 தனிப் படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனிப் படை போலீஸார் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போன ஆண் தொடர்பான புகார்களை வைத்தும், பெரம்பூர் ரயில் நிலையத்தில் மற்ற மாநிலங்களிலும் இருந்தும் ரயில்கள் வரும் என்பதால், அண்டை மாநிலங்களிலும் காணாமல் போனவர்களின் பட்டியலை கொண்டும் அதில் யாராவது கொல்லப்பட்டுள்ளனரா என்று கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தலை இல்லாத உடலில் இருந்த டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். கொல்லப்பட்டவர் உடலில் வேறு எந்த காயம் இல்லை என்றும் மயக்க நிலையிலேயே தலையை வெட்டியிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகித்து அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் சிசிடிவி இல்லை.
ரயில் நிலையத்தில் இருக்கும் சிசிடிவியும் பழுது காரணமாக, சரியாக வீடியோ கிடைக்காததால் ரயில் நிலையத்தின் நுழைவாயில்கள் மற்றும் நிலையத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து, அந்த நீல நிற சூட்கேஸைக் கொண்டு வந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில், கொலை செய்யப்பட்டவர் அமீர் அலி என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரது மனைவியைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.போலீஸ் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மனைவி, கொலை குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், அமீர் அலி தனக்கு இரண்டாவது கணவர் என்றும், திருமணத்திற்குப் பிறகு அவர் தன்னை எப்போதும் அடித்து, கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கி வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னை ஏமாற்றிவிட்டு அமீர் அலி வேறு சில பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கணவனின் சித்திரவதை தாங்க முடியாமல், ஆத்திரமடைந்த மனைவி, மற்றொரு நபரின் உதவியோடு அமீர் அலியைத் திட்டமிட்டு கொலை செய்துள்ளார். தன்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்களுடன் இருந்த ஆத்திரத்தில், கணவனின் ஆணுறுப்பைத் துண்டித்ததாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
கொலையை மறைப்பதற்காக சடலத்தை சூட்கேஸில் அடைத்து வீசியதாக மனைவி ஒப்புக்கொண்டுள்ளார். இந்த கொடூரக் கொலையில் மனைவிக்கு உதவிய மற்றொரு நபர் யார் என்பது குறித்தும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் குறித்தும் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
