சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் காந்தி நகரைச் சேர்ந்த வியாபாரி ஆசீர்வாதம், தனது இரு அறைகள் கொண்ட சிறிய வீட்டில் எந்த உயர் மின் நுகர்வு சாதனங்களும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டில் ஏ.சி. அல்லது வாஷிங் மெஷின் போன்றவை இல்லாத நிலையில், கடந்த காலங்களில் மாதாந்திர மின்கட்டணம் ரூ.800 முதல் ரூ.850 வரையே இருந்து வந்தது. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் அவர், வழக்கமான வாழ்க்கைக்கு ஏற்றவாறு மின் பயன்பாட்டை கட்டுப்படுத்தி வந்தார்.

எனினும், இந்த மாதம் அவரது செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ். அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரூ.14,267 என்ற பிரம்மாண்டமான தொகையை மின்கட்டணமாக செலுத்த வேண்டும் என்பதே அந்த செய்தி. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசீர்வாதம், உடனடியாக அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விளக்கம் கேட்டார். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் தெளிவான பதில் அளிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

“ஒவ்வொரு முறையும் ரூ.800க்குள் தான் பில் வரும். எங்கள் வீட்டில் அதிக மின்சாரம் பயன்படுத்தும் எந்த உபகரணமும் இல்லை. திடீரென 14 ஆயிரத்து இருநூற்று அறுபத்து ஏழு ரூபாய் என்றால் எப்படி ஏற்படும்?” என ஆசீர்வாதம் புலம்புகிறார். மேலும், மீட்டர் ரீடிங் எடுக்க வரும் ஊழியர்கள் 60 முதல் 70 நாட்கள் வரை தாமதமாக வருவதாகவும், அட்டையில் எந்த விவரத்தையும் பதிவு செய்யாமல் செல்வதாகவும் அவர் தெரிவித்தார் .இது தனி நபர் பிரச்னை அல்ல. அதே பகுதியில் பல மின்வாரிய நுகர்வோருக்கு இதே போன்ற அதிகப்படியான மின்கட்டணம் வந்துள்ளதாக ஆசீர்வாதம் தெரிவித்தார்.

இந்த திடீர் உயர்வுக்கு என்ன காரணம் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, தவறான பில்களை திருத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்வாரியத்தின் இத்தகைய அலட்சியப் போக்கு சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version