திமுக அரசால் வழங்கப்படும் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை இனி ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்கக் கூடிய நேரத்தில் பெரிய கட்சிகள் மாறி மாறி கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. குறிப்பாக போன தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதியான மகளிர் உரிமைத் தொகை பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு 1.31கோடி மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். திமுகவின் திட்டங்களை அதிமுக காப்பி அடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில், இனி வரும் காலங்களில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அத்தோடு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் அடுத்த 3 மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை முடக்க பார்ப்பதாகவும் ஆகையால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக தலா ரூ.2,000 என 1.31கோடி மகளிருக்கு ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
