தவெக அரசு, அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரே நாளில் களமிறங்கி, ராஜ்பவன் முன் புகார் அளித்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே கவர்னர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து மனு அளித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இன்று காலை கிண்டி ராஜ்பவனுக்கு வந்த தி.மு.க. உயர்மட்டத் தலைவர்கள், தவெக அரசு குதிரைப் பேரம் நடத்துவதாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன், எம்.பி. வில்சன் உள்ளிட்டோர் கவர்னரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். மனுவில், தவெக அரசு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை பணம், பதவி ஆசை காட்டி தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வேப்பனஹள்ளி தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவாசனிடம் ரூ.50 கோடி பணம் தருவதாகக் கூறி குதிரைப் பேரம் நடத்தப்பட்டதாகவும், “நீங்கள் இளைஞர், தவெகவுக்கு வாருங்கள்” என்று அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், நாகர்கோவில் எம்.எல்.ஏ. ஆஸ்டினிடம் ராஜினாமா செய்து தவெகவில் இணையும்பட்சத்தில் அமைச்சர் பதவி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் தி.மு.க. தரப்பு கூறியது.
சமீபத்தில் தவெகவில் இணைந்த சி.விஜயபாஸ்கரும் இத்தகைய பேரங்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் 6 மணி நேரம் துன்புறுத்தியதாகவும், அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “தி.மு.க. ஆட்சியில் அவதூறு வழக்குகளுக்காக யாரையும் கைது செய்யவில்லை. ஆனால் தவெக அரசு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது” என்று குற்றம் சாட்டினார். கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் எச்சரித்தார்.
இதற்கிடையில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனும் கவர்னரை சந்தித்தார். உயர் கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் மீது ஒரு சிறுமியிடம் முறையற்ற நடத்தை குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரினார்.
ஒரே நாளில் பல்வேறு எதிர்க்கட்சிகள் தவெக அரசுக்கு எதிராக கவர்னரிடம் புகார் அளித்திருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசு பதவியேற்று சில மாதங்களிலேயே எதிர்க்கட்சிகளின் தொடர் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தப் புகார்கள் தொடர்பாக கவர்னர் அலுவலகம் எவ்வித அதிகாரப்பூர்வமான பதிலும் இதுவரை வெளியிடவில்லை.
