தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கியுள்ளது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர்கள் பானு பிரகாஷ், மனேஷ் கார்க், கியானேஷ் பார்த்தி, பவன் குமார் சர்மா, சஞ்சய் குமார், ஆஷிஷ் கோயல் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர், கடந்த 12ம் தேதி சென்னை வந்தனர்.
இந்தநிலையில், கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான தயார் நிலை, தேர்தல் பணிகளின், முழுமையான ஆயத்தை ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். அதன் ஒருபகுதியாக நேற்று முன் தினம் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட ஆட்சியர்கள்) துணை கமிஷனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், அந்தந்த மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், எத்தனை வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன, பதட்டமான வாக்குச்சாவடிகள் எத்தனை, தேவையான துணை ராணுவப்படை எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து தேர்தல் ஆணைய குழு கேட்டறிந்தது.
இந்தநிலையில், தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் திருப்தியளிப்பதாக தேர்தல் ஆணையக்குழு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வரும் 26ம் தேதி தமிழகம் வருகை தரவுள்ளார். சென்னையில் 2 நாட்கள் தங்கியிருந்து, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், வருமானவரி, அமலாக்கத் துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடம் கலந்து ஆலோசித்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு தேர்தல் தேதியை அவர் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.
