ஆப்ரேஷன் சிந்தூரை வழி நடத்திச் சென்றவர்களில் முக்கியமான ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக அமைச்சரை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கும் நிலையில், போர் நடவடிக்கையிலும் மத அரசியலா? பாஜக எப்போது திருந்தும் என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் நடத்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூரை செயல்படுத்தியது. தாக்கிய பயங்கரவாதிகள் இந்தியர்களின் மதங்களை விசாரித்து விட்டுச் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது என்னதான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதலாக நடந்திருந்தாலும், சிலர் மத வெறுப்பின் கண்ணோட்டத்தோடும் இத்தாக்குதலைப் பார்க்கின்றனர். இந்நிலையில், ஆப்ரேஷன் சிந்தூரை வழி நடத்தியது மட்டுமன்றி, நாட்டுக்கு விளக்கம் அளித்த முக்கிய ராணுவ அதிகாரியான ராணுவ கர்னல் சோபியா குரேஷி மீதும் அந்த மத வெறுப்பு பாய்ந்திருக்கிறது.
பாஜக அமைச்சரின் அவதூறு கருத்து
அண்மையில் மத்திய பிரதேசத்தின் ராம்குண்டா கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் குன்வர் விஜய் ஷா ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து கருத்துகளைத் தெரிவித்தார். அவர், “இந்திய சகோதரிகளின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளுக்கு, அவர்களது இனத்தைச் சேர்ந்த சகோதரி ஒருவர் பாடம் புகட்டி இருக்கிறார். இந்து சகோதரர்களைக் கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளைப் பழி தீர்க்க, அவர்களது சகோதரியையே மோடி அனுப்பி வைத்திருக்கிறார். இந்திய பெண்களை விதவையாக்கியவர்களுக்கு, அவர்களது சகோதரியே பாடம் புகட்டியுள்ளார்” என்று சர்ச்சை மிகுந்த கருத்தைத் தெரிவித்தார். இக்கருத்து பலரது கண்டனங்களுக்கு ஆளானது. இதையடுத்து “நம் சகோதரிகளை விட சோபியாவை அதிகமாக மதிக்க வேண்டும். அவரது பணியை யாராலும் குறைத்து எடை போட்டுவிட முடியாது. என் கருத்து புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று பொது மன்னிப்பையும் குன்வர் விஜய் ஷா தெரிவித்தார்.
சர்ச்சைக் கருத்தின் மீது வழக்கு
இந்நிலையில், அமைச்சர் குன்வர் விஜய் ஷா மீது மத்தியபிரதேச உயர்நீதிமன்றம் தாமான முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. அவரைக் கைது செய்யவும் உத்தரவிடப்பட்டது. அதை எதிர்த்து விஜய் ஷா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடும் செய்யப்பட்டது. அதன் விசாரணையில், நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் விசாரித்தனர். உச்சநீதிமன்ற விசாரணையின்போது விஜய் ஷா சார்பில் “வழக்கை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது. உடனே குறுப்பிட்ட எதிர்த்தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே 2 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார். ஆனாலும் சட்டத்தின் நடைமுறையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வழக்கு விசாரணையை மே 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
கொந்தளித்த காங்கிரஸ்
இதற்கிடையில் கர்னல் சோபியா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தினர். ஆளுநர் மங்குபாய் படேலைச் சந்தித்து பதவி நீக்கக் கோரி வேண்டுகோளும் விடுத்திருக்கின்றனர். ஆனால் அது நாடகம் என்று மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்திருக்கிறார். மேலும் அரசியல் தலைவர்கள் பலர் விஜய் ஷா மீது கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், இதுவரை பாஜக இவ்விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது மக்களிடம் கொந்தளிப்பை அதிகரித்திருக்கிறது.
அமைச்சர் மீது விசாரணை
இந்நிலையில், அமைச்சர் குன்வர் விஜய் ஷா தெரிவித்த அவதூறு கருத்து குறித்த வழக்கை இன்று மீண்டும் உச்சநீதிமன்றம் விசாரித்தது. விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர், விஜய் ஷாவை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், “பொதுவெளியில் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்த உங்களது மன்னிப்பு எங்களுக்குத் தேவையில்லை” என்று நீதிபதிகள் கடுமையாகச் சாடினர். “பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுத்த நபரை ‘பயங்கரவாதிகளின் சகோதரி’ என்று மதத்தை அடையாளப்படுத்தி பேசியது, ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் உள்ளதாகவும் கண்டித்தனர். விஜய் ஷாவைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அவருக்கு ஆணையிட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் கருத்துக்குக் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புக்குப் பிறகும் மௌனம் காக்கும் பாஜக எப்போது திருந்தும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.