கோடை விடுமுறை நிறைவடைந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 1-ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய கல்வியாண்டை உற்சாகத்துடன் தொடங்கி உள்ளனர்.
கடந்த கல்வியாண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநிலம் முழுவதும் கடுமையான வெயில் நிலவியதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதி சில நாட்கள் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை அறிவித்தபடி இன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதிய வகுப்புகள், புதிய ஆசிரியர்கள் மற்றும் புதிய நண்பர்களை சந்திக்க மாணவர்கள் ஆர்வத்துடன் சென்றனர்,
இந்தநிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும். மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்! என்று பதிவிட்டுள்ளார்.
