கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பாக நிலப் பிரச்சனை காரணமாக மாற்றுத்திறனாளி விவசாயி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மாதர்சனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன்.
இவரது நிலத்தின் ஒரு பகுதியை சென்னையில் குடியிருந்து வரும் திம்மையா என்பவரது மகன் நவீன் மற்றும் சித்தன் ஆகியோர் அபகரித்துள்ளதோடு, அடியாட்களை வைத்து வெங்கடேசனை அடித்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், தனக்குச் சொந்தமான 20 சென்ட் நிலத்தினை அளந்து கொடுக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு வெங்கடேசன் மனு கொடுத்துள்ளார்.
எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளார்.
பின்னர் வெளியே வந்த அவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டுள்ளார். இதில் உடலில் நெருப்பு பிடித்து கதறிய அவரை அங்கு பாது காப்பு பணியில் இருந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஊற்றி நெருப்பை அனைத்துள்ளனர்.
தொடர்ந்து உயிருக்கு போராடிய வெங்கடேசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
நிலத்தினை அளந்து கொடுக்காமல் ஓராண்டாக காலதாமதம் செய்து வந்ததால், மனமுடைந்த மாற்றுத் திறனாளி விவசாயி, தீக்குளித்து கற்கொலைக்கு முயன்ற சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுவதுண்டு. பல்வேறு கோரிக்கைகளுடன், ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தங்கள் குறைகளைச் சொல்ல வருவதுண்டு. சில நேரங்களில் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காமல் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுபவர்கள் விரக்தியில் தங்கள் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சிப்பதும் உண்டு. நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் குழந்தையைக்கு தீவைத்துவிட்டு பெற்றோரும் தீக்குளித்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது.
இதனால் மக்கள் குறைதீர்க்கும் நாள்களில், இந்த அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கூடுதலாகப் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மாவட்ட ஆட்சியரகங்களில் நிறுத்தப்படுவதுண்டு. அவ்வாறு இருந்தும், கிருஷ்ணகிரு ஆட்சியரகத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆட்சிகளில்தான் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளது என்றால், புதிதாக அமைந்துள்ள தவெக ஆட்சியிலும் இது தொடர்கதையாவது, ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லையோ என்னும் எண்ணத்தையே ஏற்படுத்தியுள்ளது.
மு.செய்யது
