மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ அரசு மூன்றாவது முறையாக பதவியேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மத்திய மந்திரிசபையில் பெரிய அளவிலான மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஒன்றிரண்டு நாட்களுக்குள் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தின் முக்கிய அம்சமாக நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக பிரதமரின் முதன்மை செயலாளராகவும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னராகவும் பணியாற்றிய சக்திகாந்த் தாஸ் புதிய நிதி மந்திரியாக நியமிக்கப்படுவார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிர்மலா சீதாராமன் மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்படலாம் அல்லது கட்சிப்பணிக்கு அனுப்பப்படலாம் என்றும் பேச்சுகள் உள்ளன. மந்திரிசபை மாற்றத்திற்கான அறிகுறிகள் ஏற்கெனவே தென்பட்டன. இணை மந்திரிகளான பங்கஜ் சவுத்ரி, ஹர்ஷ் மல்கோத்ரா ஆகியோர் கட்சிப் பணிக்கு அனுப்பப்பட்டனர். ஜார்ஜ் குரியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் மோடியும் உள்துறை மந்திரி அமித் ஷாவும் தொடர்ந்து ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசியது யூகங்களை அதிகரித்துள்ளது.

பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி நீக்கப்படுவார் எனவும், அவருக்குப் பதிலாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து குறைந்தது இரண்டு பேரை மந்திரிகளாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் வினாத்தாள் கசிவு சர்ச்சை காரணமாக நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. மத்திய மந்திரி மனோகர் லால் உள்ளிட்டோருக்கும் துறை மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய முகங்கள் மந்திரிசபையில் இடம்பெறும் என்பது உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய ராகவ் சடா, திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் சிலர், பீகார் முன்னாள் முதலமைச்சர் நிதிஷ் குமார், அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் புதிய மந்திரிகளாக சேர்க்கப்படலாம். குறிப்பாக அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தற்போதைய சில இணை மந்திரிகள், குறிப்பாக தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பதவி இழக்கும் வாய்ப்பு அதிகம். மாற்றங்களின் ஊடாக கட்சியை வலுப்படுத்தும் நோக்கமும் உள்ளது. பெண்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் திறமை வாய்ந்த ஒருவர் புதிய மந்திரியாக இணையலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் மத்திய அரசின் செயல்பாட்டை மேலும் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version