இலங்கை சிறைச்சாலைகளில் தொடர்ந்து வெடித்துள்ள வன்முறைச் சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. கடந்த இரு நாட்களில் இரண்டு முக்கிய சிறைகளில் ஏற்பட்ட மோதல்களில் மூன்று கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 23-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குருவிட்ட சிறைச்சாலையில் நேற்று காலை நடைபெற்ற கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்து ரத்னபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதலுக்கு உடனடிக் காரணமாக வெளியிலிருந்து சிறைக்குள் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் அடங்கிய பை ஒன்று கண்டறியப்பட்டதும், அதைத் தொடர்ந்த கைது நடவடிக்கையும் அமைந்ததாக சட்டத்துறை அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார தெரிவித்துள்ளார்.

அரசின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிரான பதிலடியாகவே இந்த வன்முறை அமைந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு முந்தைய நாள் வியாழக்கிழமை இரவு கொழும்பு நியூ மேகசின் சிறைச்சாலையில் சுமார் 40 கைதிகள் அறையை உடைத்து வெளியேறி கலவரத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு கைதி உயிரிழந்தார். 10 பேர் காயமடைந்தனர். காவல்துறை மற்றும் சிறப்புப் படைகள் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அதேவேளை, நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். சுமார் 30 கைதிகள் சிறைக் கட்டடத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி அவர்களைக் கலைத்தனர். பின்னர் அமைதி திரும்பியது.இலங்கை சிறைகளில் நிலவும் கடும் இடநெருக்கடி மற்றும் போதைப்பொருள் கும்பல்களின் ஆதிக்கம் ஆகியவை இத்தகைய தொடர் வன்முறைகளுக்கு முக்கியக் காரணங்களாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

சிறைகளின் அதிகாரப்பூர்வ திறன் சுமார் 10,000 என்றாலும் தற்போது 39,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட பெரும் கலவரத்தில் 33 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரிகள் இந்த சம்பவங்கள் ஒருங்கிணைந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version