தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா (JNV) பள்ளிகளைத் தொடங்குவது தொடர்பான வழக்கில், தமிழக அரசு கோரிய 12 வார கால அவகாசத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இன்னும் 3 வார காலத்திற்குள் இது குறித்து அரசு தனது இறுதி முடிவை எடுத்து உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குள் தமிழக அரசிடமிருந்து நவோதயா பள்ளிகளைத் தொடங்குவது குறித்து முறையான விளக்கத்தை எதிர்பார்ப்பதாக நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டிலேயே, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை, கிராமப்புற மற்றும் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் தொடங்க நிலம் ஒதுக்கி அனுமதி அளிக்குமாறு அப்போதைய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மாநில அரசின் இருமொழிக் கொள்கைக்கு நவோதயா பள்ளிகளின் கட்டாய இந்திப் பாடம் முரணாக இருப்பதாகக் கூறி, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையும் பெறப்பட்டது. இந்தத் தடை உத்தரவு காரணமாகவே கடந்த பல ஆண்டுகளாக இப்பள்ளிகளைத் திறப்பதில் முட்டுக்கட்டை நீடித்து வந்த நிலையில், தற்போது நிலுவையில் உள்ள அதே வழக்கின் விசாரணையில்தான் உச்ச நீதிமன்றம் தற்போதைய தமிழக அரசுக்கு இந்தக் கடுமையான கெடுவை விதித்துள்ளது.
இரு மொழிக் கொள்கை மற்றும் இந்தி திணிப்பு என்ற காரணங்களை முன்வைத்து இத்திட்டத்தைத் தொடங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் இப்பள்ளிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை முடக்காமல் நேர்மறையான அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 11-க்குள் இறுதிப் பதிலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது.
