தமிழக அரசின் மதுவிற்பனை நிறுவனமான டாஸ்மாக், மதுப்பிரியர்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு மேலும் 54 புதிய நிறுவனங்களின் மதுபான வகைகளை படிப்படியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு மாநிலம் முழுவதும் உள்ள மதுப்பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த விஸ்கி, பிராந்தி, ரம், ஒட்கா, பீர் உள்ளிட்ட பல்வேறு மதுபானங்கள் விற்பனைக்கு வருகின்றன. எனினும், இவற்றில் ஒரு சில பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மட்டுமே நிலையான வரவேற்பு கிடைக்கிறது. மற்ற பல மதுபான வகைகள் பண்டிகை காலங்கள், திருமணங்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளின்போது மட்டுமே விற்பனையாகின்றன. இதனால் பல வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான பிராண்டுகளை தேர்வு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக, அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் அதிக வரவேற்பு பெற்று விற்பனையாகும் பல பிரீமியம் மதுபானங்கள் தமிழக டாஸ்மாக் கடைகளில் கிடைக்காதது மதுப்பிரியர்களிடையே நீண்டகால ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் புதிய 54 நிறுவனங்களின் பிராந்தி, விஸ்கி, பீர் உள்ளிட்ட தரமான மதுபானங்களை பல்வேறு கட்டங்களாக அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த புதிய வகைகள் விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து டாஸ்மாக் மூத்த அதிகாரிகள் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளில் வாடிக்கையாளர்களின் ரசனை மற்றும் விருப்பங்கள் கணிசமாக மாறியுள்ளன. பிரீமியம் தரத்திலான மற்றும் பிரபலமான பிராண்டுகளை அவர்கள் அதிகம் கோருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்யும் வாய்ப்பு அதிகரிக்கும்” என்றனர். இந்த நடவடிக்கை டாஸ்மாக் வருவாயை அதிகரிப்பதுடன், சட்டப்பூர்வ முறையில் மதுபானங்கள் விற்பனை செய்யும் அரசின் முயற்சிக்கு வலுசேர்க்கும் என கருதப்படுகிறது. மதுப்பிரியர்கள் இனி பல்வேறு தரமான விருப்பங்களுடன் தங்கள் தாகத்தை தணிக்க முடியும் என்பதால், இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version