சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் தாமதித்து வருவதாக கூறி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “ஆளுநர்கள் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியவுடன், அதற்கு மூன்று மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும்” என நேரக் கட்டுப்பாடு விதித்தது.
இது, மசோதா தொடர்பான விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படும் முதல் முறையாகும். இந்த நிலையில், இன்று (மே 15) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அரசியல் சட்டத்தின் 143வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை பெறும் நோக்கில் மொத்தம் 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இவை கீழ்வருமாறு உள்ளன:
- ஒரு மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும் போது, அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் அடிப்படையில் அவர் ஏற்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் என்ன?
- ஆளுநரிடம் மசோதா வந்தபின், அவர் அமைச்சரவையின் ஆலோசனைக்கு கட்டுப்படவேண்டிய நிலைதான் ஏற்கத்தக்கதா?
- 200வது பிரிவின் கீழ் கவர்னருக்கு உள்ள தனித்துவமான உரிமை சட்ட ரீதியாக செல்லத்தக்கதா?
- அரசியல் சட்டத்தின் 361வது பிரிவு, 200வது பிரிவின் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகளை நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியாதவாறு தடுக்கிறதா?
- அரசியல் சட்டத்தில் காலக்கெடு குறிப்பிடப்படவில்லை என்றாலும், நீதிமன்றம் கால நிர்ணயம் செய்ய முடியுமா?
- 201வது பிரிவின் கீழ், குடியரசு தலைவரின் தனி உரிமையை ஏற்றுக்கொள்வது சட்டரீதியாகப் பொருந்துமா?
- குடியரசு தலைவருக்கும் காலக்கெடு குறிப்பிடப்படாத நிலையில், நீதிமன்றம் கால வரம்பு விதிப்பது சட்டப்படி செல்லுமா?
- ஆளுநர் மசோதாவை குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்கும் போது, குடியரசு தலைவரின் அதிகார வரம்பு குறித்து, 143வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தில் ஆலோசனை தேவைப்படுகிறதா?
- 200 மற்றும் 201வது பிரிவுகளின் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் எடுக்கும் முடிவுகள் சட்டம் அமையுமுன் தீர்மானிக்கத்தக்கவையா? அவை நீதிமன்றத்தால் முன்பே சோதிக்கப்படலாமா?
- 142வது பிரிவின் கீழ், ஆளுநர் அல்லது ஜகுடியரசு தலைவரின் உத்தரவுகளை மாற்றமாக வெளியிடுவது சாத்தியமா?
- ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் அமலுக்கு வர முடியுமா?
- அரசியல் சட்டம் சார்ந்த பல கேள்விகள் எழும் போது, 145(3)ன் படி, குறைந்தது 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அவசியமா?
- 142வது பிரிவின் கீழ், உச்சநீதிமன்ற அதிகாரங்கள் நடைமுறை சட்டத்திற்கு மட்டுமே செல்லத்தக்கதா? அல்லது அரசியல் சட்ட நடைமுறைகளுக்கு முரண்பட்ட தீர்மானங்களும் ஏற்படுத்த முடியுமா?
- அரசியல் சட்டத்தின் 131வது பிரிவைத் தவிர, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையிலான விவகாரங்களில் உச்சநீதிமன்ற அதிகார வரம்பை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் உள்ளனவா?
இந்த கேள்விகள் அனைத்தும், மசோதா ஒப்புதல், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகார வரம்புகள் குறித்த நேர்த்தியான சட்ட விளக்கங்களுக்கான தேவை எனக் கருதப்படுகிறது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்சநீதிமன்றத்திடம் கேள்விகள் எழுப்பியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“உச்சநீதிமன்றம், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்களை குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களில் தீர்மானிக்க வேண்டும் என அளித்த தீர்ப்பை எதற்கு எதிர்க்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. இது பா.ஜ.க-வின் அரசியல் உந்துதலின் கீழ் தமிழக ஆளுநர் செயல்பட்டார் என்பதை இது தெளிவாக காட்டுகிறது.”
“உச்சநீதிமன்றத்துக்கே நேரடியாக சவால் விடும் வகையில் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டிருப்பது, மாநில அரசுகளின் ஜனநாயகத் தத்துவங்களுக்கும், மக்கள் சார்ந்த நிர்வாகத்திற்கும் எதிரானது. ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒரு அரசியல் மற்றும் சட்ட தூர்ப்பின் மீண்டும் எழுப்பும் முயற்சியாக இது தோன்றுகிறது.”
“இது போன்ற நடவடிக்கைகள் பா.ஜ.க ஆளாத மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுவதாகக் கருதப்படும். இதை தமிழ்நாடு அரசு எந்த விதமான சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்தி எதிர்த்து நிற்கும்.”
“மாநில அரசின் தன்னாட்சி மீது நேரடியாகச் சவால் விடும் இந்த முயற்சிக்கு எதிராக, பா.ஜ.க அல்லாத மாநில முதலமைச்சர்கள் அனைவரும் குரல் கொடுத்து, இந்த சட்ட போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். தமிழகம் தடம் மாறாது. தமிழகம் வெல்லும்.”
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தன் வலுவான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.