மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலின் முதல் வகுப்பு ஏசி கூபே (தனி அறை) பெட்டி, புதுமணத் தம்பதியரின் தேனிலவு பயணத்திற்காக சொகுசு ஹோட்டல் ஹனிமூன் சூட்டைப் போல அலங்கரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில், அந்த பெட்டியின் உள்ளே சிவப்பு-வெள்ளை பலூன்கள் கூரையை அலங்கரித்திருந்தன.

இருக்கைகளில் இதய வடிவில் ரோஜா இதழ்கள் துவப்பட்டிருந்தன. மலர் மாலைகள், செயற்கை விளக்குகள் மற்றும் படிக்கட்டுகளில் ஒளிரும் அலங்காரங்கள் ஆகியவை அறையை முழுமையாக மாற்றியிருந்தன. படுக்கையில் “ஐ லவ் யூ” என்ற வார்த்தைகள் ரோஜாக்களால் எழுதப்பட்டிருந்த காட்சி பலரின் கவனத்தை ஈர்த்தது.

இந்த அலங்காரப் பணியை ஒரு தனியார் ஏஜென்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. புதுமணத் தம்பதியருக்காக முன்பதிவு செய்யப்பட்ட கூபேவை அவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி டெக்கரேட்டரை அழைத்து அலங்கரித்துள்ளனர். ஜால்னா நிலையத்தில் ரெயில் நின்றபோது டெக்கரேட்டர் உள்ளே நுழைந்து அலங்காரப் பணிகளை முடித்தார். இந்த வீடியோவை அந்த தனியார் நிறுவனமே வைரல் செய்து தங்கள் அலங்காரத் திறமையை விளம்பரப்படுத்த முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் வெளியானதும் சமூக வலைதளங்களில் கடும் விவாதம் எழுந்தது. ஒருபுறம் “வீல்ஸ் ஆன் ஹனிமூன்” என்று வேடிக்கையாக பாராட்டியவர்கள், மறுபுறம் பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி கண்டித்தனர். பலூன்கள், காகித அலங்காரங்கள் போன்றவை தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதாகவும், ரெயிலில் அத்துமீறி அனுமதியின்றி அலங்காரம் செய்வது சரியல்ல என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்திய ரெயில்வே இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த ரெயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ரெயில்வே வெளியிட்ட அறிக்கையில், “பயணிகள் தாங்களாகவே டெக்கரேட்டரை அழைத்து அலங்காரம் செய்துள்ளனர். அலங்காரப் பணியாளர் அனுமதியின்றி ரெயிலுக்குள் நுழைந்தது மற்றும் டிக்கெட் இல்லாமல் பயணித்தது ஆகியவை விதிமீறல்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்கரேட்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரெயில்வே தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version