சொத்து பிரச்சினையில் சகோதரரை தாக்கிய வழக்கில், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை நகலைப் பெற நேரில் ஆஜராக உத்தரவிட்ட போதும், மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் ஜூலை 10 ஆம் தேதி கட்டாயமாக ஆஜராக வேண்டும் என மரிய வில்சனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரியும் மரியவில்சன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, குடும்ப பிரச்னை தொடர்பாக சமரசம் செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்று, உயர்நீதிமன்ற சமரச தீர்வு மையத்துக்கு வழக்கை அனுப்பி வைத்த நீதிபதி, ஜூலை 13 ஆம் தேதி அமைச்சர் மரியவில்சன், அவரது தந்தை மற்றும் சகோதரர், சகோதரரின் மனைவி ஆகியோரை சமரச தீர்வு மையத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
அதேசமயம், புதுச்சேரி நீதிமன்றத்தில் நாளை (ஜூலை 10 ஆம் தேதி ) நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்களித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
