திருப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் நின்றிருந்த கேஸ் சிலிண்டர் லாரி மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள குதிரட்டிப்பட்டி மற்றும் புச்சிரெட்டிப்பள்ளி கிராமங்களைச் சேர்ந்த 3 குடும்பத்தினர், சுற்றுலா செல்வதற்காக காரில் அதிகாலை ஊட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜூலை 18) காலை 5.30 மணி அளவில் கார் சென்றுகொண்டிருந்தபோது, செங்கப்பள்ளி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கேஸ் சிலிண்டர் லாரியின் பின்பக்கத்தில் கார் எதிர்பாராதவிதமாக அதிவேகமாக மோதியது.

இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த குமார் (36), விஜய் (30), தேன்மொழி (30) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குமார் மற்றும் விஜய்யின் உடல்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், தேன்மொழியின் உடல் ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

விபத்தில் குமாரின் 6 வயது மகள் சுபஸ்ரீ தலையில் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த 4 பேர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்திற்கு எதிரே இருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், கார் லாரி மீது மோதும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version