தமிழக சட்டசபையில் நாளை முதல் முறையாக தவெக அரசின் 2026-27 பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. 17-வது சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தவெக, மே 10-ஆம் தேதி முதல் அமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, இது அரசின் முதல் முழுமையான நிதி அறிக்கையாக அமைகிறது.

ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய முதல் அமர்வு, நன்றித் தீர்மான விவாதத்துடன் முடிவடைந்தது. அப்போது முதல்வர் பதிலுரையும் வழங்கினார். இப்போது மீண்டும் கூடும் சட்டசபையில், புதன்கிழமை காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் பொதுப் பட்ஜெட்டை சமர்ப்பிக்கிறார். புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்டங்களும், மக்கள் நலத் திட்டங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த நாள் (ஆகஸ்ட் 6) வேளாண் பட்ஜெட் தனியாகத் தாக்கல் செய்யப்படும். இதனை வேளாண் அமைச்சர் வினோத் சமர்ப்பிக்கிறார். முந்தைய திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் மற்றும் அமைச்சர்களின் பதிலுரைகள் அடுத்த சில நாட்களில் நடைபெறும். சரியான நாட்கள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையிலான அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

அதைத் தொடர்ந்து 55 துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் தொடங்கும். ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று துறைகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, சுமார் ஒன்றரை மாதங்கள் சட்டசபை செயல்படும் என தெரிகிறது. தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500, ஆண்டுக்கு ஆறு இலவச எல்பிஜி சிலிண்டர்கள், திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச் சேலை, ₹20 லட்சம் வரை கல்விக் கடன், குடும்பத்திற்கு ₹25 லட்சம் மருத்துவக் காப்பீடு, ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

இவற்றில் சில ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 (அண்ணா பிறந்தநாள்) அன்று தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ₹75,000 வரை பயிர் கடன் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள முக்கிய வாக்குறுதிகள் இந்தப் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. மக்களின் நம்பிக்கையை நியாயப்படுத்தும் வகையில், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் புதிய திட்டங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை நாளை வெளிவரும் பட்ஜெட் தெளிவுபடுத்தும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version