சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்காக மும்மொழிக் கொள்கையை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து ஒத்திவைக்க வேண்டும் என்று கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரும், மூத்த காங்கிரஸ் எம்.பி.யுமான திக்விஜய்சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பல பெற்றோர்கள் தமக்கு மனுக்கள் அனுப்பியுள்ளதாகவும், அவற்றை ஆய்வு செய்தபோது எழுப்பப்பட்டுள்ள கவலைகள் நியாயமானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, போதுமான ஆசிரியர்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் தேவையான கால அவகாசம் இல்லாத நிலையில் கல்வி ஆண்டின் நடுப்பகுதியில் புதிய மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவது மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி.) புதிய மொழிப் பாடப்புத்தகங்களை வெளியிடும் வரை தற்போது நடைமுறையில் உள்ள மொழிப்பாடத் திட்டத்தையே தொடர வேண்டும் என்று பாடத்திட்டக் குழு பரிந்துரைத்திருந்தது. இந்த பரிந்துரைக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் சி.பி.எஸ்.இ. ஆட்சிமன்றக் குழுவும் ஒப்புதல் அளித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், ஜூலை 1 முதல் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் வகையில் சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை வெளியிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், புதிய பாடப்புத்தகங்கள் இன்னும் தயாராகாத நிலையில், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டிருப்பது கல்வித் தரம் மற்றும் கற்றல் தொடர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த நடைமுறை கூடுதல் சவால்களை உருவாக்கும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் இந்தி பயன்பாடு குறைவாக இருப்பதுடன், வடகிழக்கு மாநிலங்களின் பல பழங்குடியின மொழிகள் சி.பி.எஸ்.இ. அங்கீகரித்த மொழிப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பல பள்ளிகள் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தைத் தேர்வு செய்துள்ள போதிலும், அதற்கான தகுதியான ஆசிரியர்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் போதுமான அளவில் இல்லை என்ற கவலையும் எழுப்பப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பரிசீலித்து, தேவையான கல்வி வசதிகள் மற்றும் வளங்கள் உருவாக்கப்படும் வரை 9-ம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திக்விஜய்சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version