மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ‘மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்’ என அழைக்கப்படும் இந்த உடன்படிக்கை, பிராந்திய பாதுகாப்பு அமைப்பில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மெக்காவில் உள்ள அல்-சஃபா அரண்மனையில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது நடத்தப்படும் ஆயுதத் தாக்குதல், மற்ற இரு நாடுகள் மீதான தாக்குதலாகவும் கருதப்படும். இது நேட்டோவின் கூட்டுப் பாதுகாப்பு உறுதிமொழியை ஒத்ததாகக் கருதப்படுகிறது.

எண்ணெய் வளத்தில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சவுதி அரேபியா, அணு ஆயுதத் திறன் கொண்ட பாகிஸ்தான் மற்றும் நேட்டோவில் இரண்டாவது பெரிய ராணுவ சக்தியாகத் திகழும் துருக்கி ஆகியவை ஒரே பாதுகாப்புக் கட்டமைப்பில் இணைவது, மேற்காசியாவின் புவிசார் அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த ஒப்பந்தம், சவுதி-பாகிஸ்தான் இடையே கடந்த ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கையின் நீட்சியாகவும் பார்க்கப்படுகிறது. கூட்டு ராணுவப் பயிற்சிகள், பாதுகாப்புத் தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளும் இதில் இடம்பெற வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, ஈரான் இந்த நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துள்ளது. ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெசாயி, சவுதி அரேபியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். “அமெரிக்காவுடன் நீண்டகாலம் ஒத்துழைத்தும் எதிர்பார்த்த பாதுகாப்பு கிடைக்காதது போலவே, துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான இந்த காகித ஒப்பந்தமும் உண்மையான பாதுகாப்பை வழங்காது. பிற நாடுகளிடம் பாதுகாப்பை நாடாத வகையில் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள்” என அவர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவும் இராணுவ மற்றும் அரசியல் பதற்றத்துக்கு மத்தியில், இந்த புதிய கூட்டணி மேற்காசியாவின் அதிகார சமநிலையை எவ்வாறு பாதிக்கும் என்பது கவனமாகக் கவனிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version