தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கட்சியின் பினாமியாகச் செயல்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பகீர் குற்றாச்சாட்டைக் கூறியுள்ளார்.
நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் உலகின் மிகப்பெரிய அரசியல் இயக்கத்தின் தலைவராக நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். பல நாடுகளுக்கு சென்று இந்தியாவிற்கு தேவையானவற்றை பெற்றுக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.
போர் சூழலிலும் குண்டு மழை பொழிந்து வரும் நிலையிலும் இந்தியாவிற்கு தேவையான பொருட்கள் தங்கு தடை இன்றி கிடைத்து வருகிறது என்றார்.
அண்ணாமலை தொடர்பான கேள்விக்கு, அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து அவரும் யாரிடமும் சொல்லவில்லை. நாங்களும் அவரிடம் பேசவில்லை.
அவர் ராஜினாமா செய்வதற்கான எந்த கடிதமும் இருக்கவில்லை. எங்களிடமும் கிடைக்கவில்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றார்.
தொடர்ந்து பேசியவர், முதல்வர் சிறுபான்மை அரசு என தொடர்ந்து சொல்லி வருகிறார். சிறுபான்மையினருக்கான அரசா சிறுபான்மையினர் அரசா என்பதை முதலமைச்சர்தான் விளக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருந்து வருகிறது, கொலை, கற்பழிப்பு, பாலியல் குற்றம், ஊழல் என அனைத்தும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
டாஸ்மாக்கில் மாமுல் வாங்க தவெகவினர் ஆரம்பித்து விட்டார்கள். பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவதாகப் பேசி வாக்குகளை பெற்றுக்கொண்டு வாக்களித்த மக்களை அவர்கள் ஏமாற்றி வருகிறார்கள். இந்த அரசு வாக்களித்த மக்களுக்கு என்ன சொல்லப் போகிறது என்று தெரியவில்லை.
எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியின் குறைகளைச் சொல்ல உரிமை உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியின் கருத்து தொடர்பாக முதலமைச்சர் அசிங்கமாக மேடைகளில் பேசி வருகிறார். முதலமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.
டெல்லி சென்று பாஜக அகில இந்திய தலைவரை பார்த்ததாகவும், தான் மத்திய அமைச்சர் ஆவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறிய நயினார் நாகேந்திரன், விஜய் முதல்வர் ஆனது குறித்து அவருக்கே ஆச்சரியமாக உள்ளது. விஜய் இன்னும் அவரது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை என்றார்.
விஜய் பொறுப்பேற்ற 20 நாளில் மின்வாரிய ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது. இன்னும் மீதமுள்ள நாட்களில் என்னவெல்லாம் காணாமல் போகுமோ என்று அச்சம் எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பினாமியாக தமிழக வெற்றி கழகம் செயல்படுவதாக பகீர் குண்டைப் போட்டவர், இப்போது உள்ள சூழலில் தமிழகத்தில் உருவாகியுள்ள இடைத்தேர்தல் தேவையில்லாதது. தேர்தல் முடிந்து 20 நாளில் இடைத்தேர்தல் என்பது ஏற்க முடியாத ஒன்று.
தமிழகத்தில் குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கிறது தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பதற்கு பல கோடி ரூபாய் கை மாறி உள்ளது என தெரிவித்தார்.
திமுக உடன் பாஜக உறவு வைக்க முயற்சிப்பதாக எழும் கேள்வியே அவசியமில்லாத ஒன்று எனக் கூறியவர், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமை முடிவெடுக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
