தவெக தலைவர் விஜய் மீண்டும் தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு ஈரோட்டில் மிகுந்த பாதுகாப்புடன் மக்களை சந்தித்த அவர், தற்போது சேலத்தில் பொதுவெளியில் மீண்டும் தலைக்காட்ட உள்ளார். இது மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியாக அல்லாது, நிர்வாகிகள் கூட்டமாக நடைபெறும் என கட்சி தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள சுமார் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டு அல்லாத நபர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர், குழந்தைகள் இந்நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் எனவும், வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு கொள்ளலாம் எனவும் கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதியம் 12 மணி முதல் 3.30மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் விமான நிலையம் வருகிறார் தவெக தலைவர் விஜய். அங்கிருந்து கூட்டம் நடைபெறும் இடத்திற்கு கார் மூலம் செல்லவுள்ளார். இந்தக் கூட்டத்திற்காக தவெகவினருக்கு போலீசார் சுமார் 51 நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதன்படி, விஜய் வேனில் நின்றபடி மட்டுமே பேச வேண்டும். இருக்கைகள் அமைக்கக் கூடாது. கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பங்கேற்கக் கூடிய அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட நிபந்தனைகள் போலீசாரால் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் விஜய் எதைப் பற்றி பேசப்போகிறார் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமூகத்தில் நடக்கூடிய விஷயங்கள், எப்ஸ்டீன் ஃபைல்ஸில் மோடி பெயர் இடம்பெற்றது, நாடாளுமன்ற விவகாரம், பட்ஜெட் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசுவாரா? அல்லது வழக்கம் போல டயலாக்குகளை மட்டும் பேசி செல்வாரா? என பல கேள்விகள் எழுந்துள்ளது.
