தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்று அவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த சந்திப்பு கட்சிக்குள் எழுந்த விமர்சனங்கள் மற்றும் தொண்டர்களின் கொந்தளிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கடந்த ஜூலை 18-ஆம் தேதி கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவரும் முதல்வருமான சி. ஜோசப் விஜய்க்கு எதிராக மார்க்கண்டேயன் கடுமையான வார்த்தைகளில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, “முதல்வரின் எலும்பை உடைப்பேன்” என்று அவர் பயன்படுத்திய வெளிப்பாடு பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதைத் தொடர்ந்து, தவெக நிர்வாகி காசிராம் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஜூலை 20-ஆம் தேதி அதிகாலையில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய சபாநாயகரின் முன் அனுமதி தேவை என்று மார்க்கண்டேயன் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த அதிரடி நடவடிக்கைக்கு தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திமுக நிர்வாகிகள் உடனடியாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால், ஆளுங்கட்சியின் இந்த நடவடிக்கையை எதிர்கொள்ளும் போது கட்சி மாநிலத் தலைமை ஆரம்பத்தில் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், “களத்தில் நின்று போராடும் எம்எல்ஏவுக்கு தலைமை உடனடி ஆதரவு தரவில்லையே” என்ற ஆதங்கம் தொண்டர்கள் மத்தியில் பரவியது. சமூக ஊடகங்களிலும் இது கடும் விவாதத்துக்கு உள்ளானது.
கட்சிக்குள் தலைமை மீதான அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நேரடியாக சிறைக்கு சென்றார். சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த உதயநிதி, “கட்சி உங்களுடன் உறுதியாக நிற்கிறது. எந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கும் திமுக அஞ்சாது” என்று தைரியம் அளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜனநாயக ரீதியில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளின் குரலை நசுக்க இந்த கைது நடவடிக்கை பயன்படுத்தப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார். சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வழக்கை தீவிரமாக எதிர்கொள்வோம் என்றும் உறுதியளித்தார்.
உதயநிதியின் இந்த நடவடிக்கை திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்த விவகாரம் பெரும் அரசியல் மோதலாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியினரின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக திமுக தரப்பு குற்றச்சாட்டுகள் தொடரும் வாய்ப்பு உள்ளது.
