ஒன்றிய பாஜக அரசு சட்டத்தை மீறி செயல்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை கடிந்துரைத்துள்ளார்.
சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன் சூட் அவர்களுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மற்றும் நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே தேர்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தரப்பில் பல்வேறு மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் தண்டார்பேட்டை அஞ்சல்நிலையம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர். கு. செல்வப்பெருந்தகை தலைமையிலும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சொர்ண சேதுராமன், பொருளாளர் ரூபி மனோகரன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், மாநில பொதுச் செயலாளர் S A வாசு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்போட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இறுதியில் உரையாற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, ஒன்றிய அரசு சட்டவிதிகளை மீறி சிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு வழங்கியிருப்பதாகக் குற்றம்சாட்டினார். குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
