இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், யுபிஐ (UPI) முறையில் பணம் செலுத்துவது சாதாரண மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது. சிறு கடைகள் முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ மூலம் எளிதாக பணம் செலுத்த முடிவதால், ரொக்கப் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சில்லறைப் பிரச்சினையும் இல்லை. இதனால் மக்கள் யுபிஐ மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ரூ.2,000-க்கு மேல் உள்ள வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட் (MDR) கட்டணம் விதிக்க மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகி பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020 ஜனவரி முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் யுபிஐ மற்றும் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த தள்ளுபடியை ரத்து செய்து, மீண்டும் கட்டணம் வசூலிக்க அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

ஆண்டு வருவாய் ரூ.1.50 கோடி வரை உள்ள சிறு வணிகர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது ரூ.2,000-க்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கு அரசு 0.15% ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. ஆனால் டிஜிட்டல் கட்டமைப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த ஊக்கத்தொகை போதாது என பணப்பரிவர்த்தனை கவுன்சில் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு நேரடி பாதிப்பு இருக்காது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தனிநபர்-தனிநபர் பரிவர்த்தனைகள் இலவசமாகவே தொடரும். இருப்பினும், வணிகர்கள் இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவார்களா அல்லது தாங்களே ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் மொத்த எண்ணிக்கையில் சுமார் 5% மட்டுமே இருந்தாலும், மொத்த மதிப்பில் 65% வரை உள்ளன.

நேற்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் பேசும்போது, “கட்டணம் பற்றி இப்போதே பேசுவது உகந்ததல்ல. அரசு இன்னும் திருத்தங்களைச் செயல்படுத்தி வருகிறது. கட்டணத்தை யாராவது ஒருவர் செலுத்தியாக வேண்டும். இந்த பொது உள்கட்டமைப்பு வலுப்பெற வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version